செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஏக்கம்

 
என்
காதல் பரிணாமத்தில்
முளைவிட்ட மலரே...
 
என் காதல்
வளர்ச்சியில்
ஓங்குபண்பாய் நீ
ஒட்டிக்கொண்டாய்...
 
என் உயிர்
ஒளிர்விடவென்றே
தளிர் போல
பூத்தவள் நீ...
 
மேகமும் மேகமும்
மோத மோத
விளைவது மின்னல்...
உன் கண்களும்
என் கண்களும்
மோத மோத
விளைவது காதல்...
 
என் உயிர்த்
துளிகளிலிருந்து
நிறப்பிரிகை அடைந்துள்ளாய்...
நாம் இணைகையில்
நிறம்
அர்த்தமற்றதாகிறது...
 
இன்று உன்னைக்
காண்பேனோ..?
கேள்வியுடன் ஊர்ந்தேன்
உன்னைக் காணவேயில்லை..
என்னுள் காதலின் தொல்லை...
 
சந்தோசமா துக்கமா?
என்னுள் இருந்தது எது?
மறைந்தது எது?
உன்னைக் காணாததில் - எனக்கு
துக்கமான சந்தோசம்...
 
உன் உள்ளம்
பாறைகளால்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது..
உன் மீது
மோதமோத
உதிரம் வடிகிறது இதயத்தில்..
 
இழப்பது உதிரம்
என்றாலும்
ஏற்பது காதல் என்பதால்
உயிர்க்கிறேன்..
வியர்க்கிறேன்...
 
இது எனக்கு
சோதனைக்காலம் என்பதால்
வேதனைப்படுத்துகிறாய்...
 
உன்னை வர்ணிப்பது
இறக்கும்போதான
ஆசைக்குச் சமம்...
ஆனால்
வர்ணிக்காதிருப்பது
நீ அருகில் இருக்கும்போதே
துறவுகொள்ளல் போன்றது..
 
நீ நிஜம்...
நான் பொய்...
இருவரும்
இருட்டின் வெளிச்சத்தில்
ஒளிசிந்தா ஜோதியாக
இணைகையில்
பொய்யான நிஜம்
பிறக்கிறது...
 
காதல் துளி
அடுக்கடுக்காய்ப் பெருகி
வெள்ளமாகிவிட்டது..
அணை போட்டாலும்
உடைக்குமளவிற்கு...
 
நீ தோழி என்றாலும்
உன் பெண்மை
எனக்கு எதிரி...
எனவே தான்
உன்னைச் சந்திக்க
அஞ்சுகிறது இதயம்..
 
பூ எப்போது
மலரும் என்று
அறுதியிட்டுக் கூற இயலாது..
அதுபோலதான் என்
காதலும்...
 
சிலநேரம் வருகிறாய்..
மலர்கிறேன்..
சிலநேரம் தவிர்க்கிறாய்..
உலர்கிறேன்...
 
நீ அழகைவிட
அழகானவள்...
பெண்மையைவிட
மென்மையானவள்..
கண்ணீரைவிட ஈரமானவள்
காதலைவிட
ஆழமானவள்...
 
நீ
இன்பத்திற்குப் பிறந்தவள்
நீ வராதபோது நான்
துன்பப்படுகிறேன்..
 
நீ வரவில்லை
என்பதால் நான்
ஏங்கவில்லை
இன்றும் வரவில்லை
என்பதால்
தூங்கவில்லை...
 
என் காதல்
ரதத்தின் ராணி நீ..
சுமைதாங்கி நான்..
உன் சுமை பெரிதல்ல
நீ வராமலிருப்பதுதான்
பாரமாயிருக்கிறது
நெஞ்சுக்குழிக்குள்...
 
நீ அழகின் மீது
மெருகு ஏற்றப்பட்டு
பேரழகாய் ஜொலிக்கிறாய்...
 
நீ
நான் காணக்காணத்
தித்திப்பவள் - நான்
உன்னைக் காணாதபோது
விக்கிப்பவன்...
 
அழகின் சித்திரம்
போன்றவள் நீ
ஆனால் சற்று
விசித்திரமானவள்..
 
என்னை ஏங்கவைத்து
நிம்மதியில்
தூங்குபவள்..
 
ஒவ்வொரு வினாடியும்
மரண அவஸ்தைதர
உனக்காய் ஏங்குகிறேன்..
தெளிவற்ற குட்டையாய்த்
தேங்குகின்றேன்...
 
நீ
வராதபோது கூட
உன் நினைவுகள்
இதயத்தை ஆற்றுகிறது..
ஆனால்
நீ வரும்போதுதான்
உனக்காக இதயம்
ஏங்குகிறது...
உன் வருகை
உயிருக்குள்
ஒரு திணறல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக