செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஏக்கம்

 
என்
காதல் பரிணாமத்தில்
முளைவிட்ட மலரே...
 
என் காதல்
வளர்ச்சியில்
ஓங்குபண்பாய் நீ
ஒட்டிக்கொண்டாய்...
 
என் உயிர்
ஒளிர்விடவென்றே
தளிர் போல
பூத்தவள் நீ...
 
மேகமும் மேகமும்
மோத மோத
விளைவது மின்னல்...
உன் கண்களும்
என் கண்களும்
மோத மோத
விளைவது காதல்...
 
என் உயிர்த்
துளிகளிலிருந்து
நிறப்பிரிகை அடைந்துள்ளாய்...
நாம் இணைகையில்
நிறம்
அர்த்தமற்றதாகிறது...
 
இன்று உன்னைக்
காண்பேனோ..?
கேள்வியுடன் ஊர்ந்தேன்
உன்னைக் காணவேயில்லை..
என்னுள் காதலின் தொல்லை...
 
சந்தோசமா துக்கமா?
என்னுள் இருந்தது எது?
மறைந்தது எது?
உன்னைக் காணாததில் - எனக்கு
துக்கமான சந்தோசம்...
 
உன் உள்ளம்
பாறைகளால்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது..
உன் மீது
மோதமோத
உதிரம் வடிகிறது இதயத்தில்..
 
இழப்பது உதிரம்
என்றாலும்
ஏற்பது காதல் என்பதால்
உயிர்க்கிறேன்..
வியர்க்கிறேன்...
 
இது எனக்கு
சோதனைக்காலம் என்பதால்
வேதனைப்படுத்துகிறாய்...
 
உன்னை வர்ணிப்பது
இறக்கும்போதான
ஆசைக்குச் சமம்...
ஆனால்
வர்ணிக்காதிருப்பது
நீ அருகில் இருக்கும்போதே
துறவுகொள்ளல் போன்றது..
 
நீ நிஜம்...
நான் பொய்...
இருவரும்
இருட்டின் வெளிச்சத்தில்
ஒளிசிந்தா ஜோதியாக
இணைகையில்
பொய்யான நிஜம்
பிறக்கிறது...
 
காதல் துளி
அடுக்கடுக்காய்ப் பெருகி
வெள்ளமாகிவிட்டது..
அணை போட்டாலும்
உடைக்குமளவிற்கு...
 
நீ தோழி என்றாலும்
உன் பெண்மை
எனக்கு எதிரி...
எனவே தான்
உன்னைச் சந்திக்க
அஞ்சுகிறது இதயம்..
 
பூ எப்போது
மலரும் என்று
அறுதியிட்டுக் கூற இயலாது..
அதுபோலதான் என்
காதலும்...
 
சிலநேரம் வருகிறாய்..
மலர்கிறேன்..
சிலநேரம் தவிர்க்கிறாய்..
உலர்கிறேன்...
 
நீ அழகைவிட
அழகானவள்...
பெண்மையைவிட
மென்மையானவள்..
கண்ணீரைவிட ஈரமானவள்
காதலைவிட
ஆழமானவள்...
 
நீ
இன்பத்திற்குப் பிறந்தவள்
நீ வராதபோது நான்
துன்பப்படுகிறேன்..
 
நீ வரவில்லை
என்பதால் நான்
ஏங்கவில்லை
இன்றும் வரவில்லை
என்பதால்
தூங்கவில்லை...
 
என் காதல்
ரதத்தின் ராணி நீ..
சுமைதாங்கி நான்..
உன் சுமை பெரிதல்ல
நீ வராமலிருப்பதுதான்
பாரமாயிருக்கிறது
நெஞ்சுக்குழிக்குள்...
 
நீ அழகின் மீது
மெருகு ஏற்றப்பட்டு
பேரழகாய் ஜொலிக்கிறாய்...
 
நீ
நான் காணக்காணத்
தித்திப்பவள் - நான்
உன்னைக் காணாதபோது
விக்கிப்பவன்...
 
அழகின் சித்திரம்
போன்றவள் நீ
ஆனால் சற்று
விசித்திரமானவள்..
 
என்னை ஏங்கவைத்து
நிம்மதியில்
தூங்குபவள்..
 
ஒவ்வொரு வினாடியும்
மரண அவஸ்தைதர
உனக்காய் ஏங்குகிறேன்..
தெளிவற்ற குட்டையாய்த்
தேங்குகின்றேன்...
 
நீ
வராதபோது கூட
உன் நினைவுகள்
இதயத்தை ஆற்றுகிறது..
ஆனால்
நீ வரும்போதுதான்
உனக்காக இதயம்
ஏங்குகிறது...
உன் வருகை
உயிருக்குள்
ஒரு திணறல்...

சனி, 28 ஆகஸ்ட், 2010

கொடுக்கு...



உனக்கெனவே காத்திருந்து
வெளிறிப்போன
அர்த்தமற்ற நொடிகளில்...

உன்
உன்னதப் பார்வைக்கென
ஏங்கிப் பறிதவித்த
நுட்ப வினாடிகளில்...

துடிப்புகளில்
சமிக்ஞை உணர்ந்து
இடம்பெயரும்
உதிரத்துளிகளிடையே
ஒவ்வொரு துடிப்பினிடையேயும்
உயிர் கொல்லும்
வன்ம வலி....

அதோ
அருகில் நெருங்கிவிட்டாய்..
இடைவிடாது மார்பிலறைந்து
அழும் மனது...
அதிகரிக்கிறது துடிப்பு...

ஒவ்வொரு துடிப்பிற்கும்
இடையில் அந்த
நெடுடல்மிக்க வலியைத்
தெளிவாக உணரமுடிகிறது...

சிற்சில வினாடிகள்
மூச்சை முழுக்க இழுத்து
வலியைத் தேக்கிக்கொள்கிறேன்...

நீ கடக்கிறாய்..
உன் ஸ்பரிசம்
மெல்லக் கரையக்கரைய
இழுத்தடிக்கப்பட்ட மூச்சு
மீண்டும் அந்த
இயல்பான
மரண வலிக்குள் தன்னை
இழுத்துக்கொ(ல்)ள்கிறது...

மென்மையாக
இதயத்தின் இரும்புக்கதவுகளை
எப்படியோ நெம்பி
நுழைந்திருக்கிறது
உன் காதல் கொடுக்கு...


வெண்பா...

அமிழ்தெனும் நஞ்சா யிதயத்துள் காதல்
நிமிண்டி நுழைந்த கொடுக்கு...

சனி, 23 ஜனவரி, 2010

லாடம் கட்டப்பட்ட முகமூடி...


கிழித்துத்தான் எறியமுயல்கிறேன்... 
என் முகம் 
எனக்கே மறந்துபோனது...
ஒட்டிவைக்கப்பட்டிருக்கிறது
உன் முகம்
என் முகமூடியாய்....
 
பயணக்களைப்பு என்னுள்
கண்ணயருவதில்லை.. உன். 
நயங்கள் நினைவிலாடி
கண்ணயர விடுவதுமில்லை...
 
உன் சுமைகளைச் சுமக்கவேண்டி
உனக்காகவே ஏற்றப்பட்ட 
லாடம் சுமையாக
பாடம் படிக்கிறது புத்தி...
 
சுமக்கவியலாது இந்த
முகமூடியைச் சுமக்கிறேன்...
நமநமத்து வியர்த்து வடிந்து
முகவரி தொலைந்து திரிகிறேன்...
 
கல்லடி படாமல் 
பாதம் பாதுக்காக்க - இந்த
முள்ளடி படுகின்றேன்...
 
உனக்கான சுமையை ஏற்றி
இன்பித்துக்கொள்... உன் மகிழ்ச்சியில்
எனக்கான வாழ்நாள்
துன்பத்தோடு இன்பமாய்...
 
சுமை கணன்று நான்
நெஞ்சுமரிக்கும் நாளில்
எனக்கென உன்னுள்
துளிர்க்கும் கண்ணீர்துளி காண
லாடம் கட்டப்பட்ட முகமூடி
காத்திருக்கிறது -
உயிர்மட்டும் இல்லாமல்....

புதன், 20 ஜனவரி, 2010

மண்டி


உன் நினைவுகள்
ஏற்படுத்தும்
இன்பக்காயங்களுக்கு
கவிதையால்
மருந்திடுகிறேன்...
ஆனால் அவை
மேலும் ரணப்படுத்தியே
அழகுபார்க்கின்றன...
 
விளக்கின் சுடர்போல
உன் பிரகாசம்...
வெறும் காற்று நான்...
என் பார்வைக்கு
அஞ்சி சலனப்படாதே...
நீ எரிவதும்
என்னால்தான்...

காதல் என்னுள்
குடம்குடமாக
நிரம்பி வழிகிறது..
எடுத்துச்செல்லத்தான்
உனக்குத் தயக்கம்...

உன் காதலை
நீ சொல்லாதே...
இப்பொழுதெல்லாம் உன்
புன்முறுவலைக்கூட என்னால்
தாங்கமுடிவதில்லை...

உண்மையும் பொய்யும்
மாறிமாறிப்
பிய்த்துத் தின்றதில்
மிஞ்சிப்போன
எச்சம்தான் இளமை...

இன்னமும்
உன் அழகை
அள்ளிப்பருக முனைந்து
எச்சில் வடிக்கிறது
கவிதை..

வெறும் எச்சத்தை
வினையெச்சமாக்கத்
துடிக்கிறது காதல்...

உன்னைப்பற்றிய
கனவுகளாலேயே
எச்சமாக்கப்படுகிறது
என் வாழ்க்கை...

உன் வருகைக்கெனவே
ஏங்கிய கவிதை
தவங்கிடக்கிறது...

உன்
நினைவுகளுக்கெனவே
ஏங்கி
மண்டியிடுகிறது மனம்..

உன்னையே எண்ணி
உன்னோடே என்னை
முடித்துக்கொண்டதில்
யுகங்களை வினாடிகளாக்கி
வீணாய்ப்போனது இளமை...

என் இளமையின்
அனைத்து
துளிகளையும்
துடைத்து எடுத்துவிட்டாய்...
இன்னமும்
மிச்சமிருக்கும்
காதல் மண்டியாக.....

வெள்ளி, 25 டிசம்பர், 2009

மீட்டல்...





இரைதேடிப் பறக்கும்
பறவைபோல காதல்
கரைதேடிப்பறக்கிறது
சிறகொடிந்த இந்த உயிர்....

'உன் இதழுக்கு மட்டும் ஏன்
அத்தனை சிவப்பெழில்?
உதட்டுச்சாயத்துக்கு என்
உதிரத்தை பூசிக்கொண்டதாலா...? '

முற்றும் துறந்து
உன்னையே தன்
முற்றமெனச் சுற்றுகிறது
என் உயிர்...

தேடலில் தொலைந்தது என்
கிழமைகள் - வறட்டுக்
கிழமாய் என்னை
அடையாளப்படுத்திக்கொள்கிறது

வெற்றுக் கிழமைகளாயே
தொலைக்கப்பட்டுவிட்டது
முற்றுப் பெறாத என் இளமை...

உயிர் இன்னமும்
உன்னையே சுற்றி
உயிர்ப்பிழந்து போனது...

கண்ணீர் என்னுள்
கவிதைகளைக் கிளறுகிறது
உன்னில் நான்
தொலைந்து போன
வினாடிகளை மீட்டெடுக்க
முயல்கிறது...

வேட்கையில் தொலைந்துபோன
வேதனைக் கிழமைகளை....
எவ்வளவு முயற்சித்தும்
உன்னிலிருந்து என்னை
மீட்க முடியவில்லை....

நீ இல்லாத ஒரு
நியூரானைக்கூட
தனித்துப் பிரித்திட
இயலாது என்
நினைவகத்தில்...

நீ பல்லவி -
நான் சரணம்
உன் கரணம் தப்பும்போது
நான் மரணம்...
 
என்னை
அச்சு பிசகாமல்
மீட்டி வைத்திருக்கிறாய்...
நரம்பறுந்த பின்னும் - உன்
நாதம் தொடர்கிறது....

வெள்ளி, 18 டிசம்பர், 2009

கனவு...


பகலில் பதட்டமிற்றிப்
பரிகசிக்கும் நீ
கண்ணிறைந்த பயத்துடன்
உறைவிடம் தேடி
ஓடிவருகிறாய்...
இரவில் கனவாக...

என் காதலைச்
சோதிக்க நினைக்கும்
உன் நினைவலைகள்
மெள்ளமாய்
கண்களை நிமிண்டித்
திறந்துபார்க்கிறது...
உள்ளுக்குள் நீ
ஒளிந்திருக்கிறாயா என்று...

சந்தேகம் ஏன்..?
என் நினைவுகளுக்குள்
வேறுஎதைப் புதைத்து
அழகுபார்க்க முடியும்
உன்னைத் தவிர....

உறங்கும் போதும்
உயிருக்குள் உன்னை
உயிர்பித்து என்னைச்
சோதித்துப்பார்க்கிறது
இந்தக்கனவு...

வேறு எதை வைத்து
என் காதலை
அளந்து பார்க்க முடியும்
உன்னை நினைத்தால்
அழையாமலேயே
என்னுள் பூக்கும்
சில துளி
கண்ணீரைத் தவிர...

என்னிச்சை கேளாமல்
அன்னிச்சையாய்த் தோன்றி
உன்னிச்சை மேம்பட...
தன்னிச்சையாய்
உனை அழைத்துத்
தன்னை  மகிழ்வித்துக்
கொள்(ல்)கிறது கனவு..

உறங்கும்போதும்
என் கனவு
காணும் கனவு
நீ....

செவ்வாய், 8 டிசம்பர், 2009

ஒளிதல்..


காதல் பிரபஞ்சத்தில்
உன் அபரிமிதமான
ஈர்ப்புவிசையில் சிக்கித்தான்
இயங்கிக்கொண்டிருகிறது
இந்த இதயம்....
 
உன் ஈர்ப்புவிசை நேர்த்தியானது...
சுற்றும் என் இதயத்தைச்
சூடாக்கி அழகுபார்க்கிறது...
 
இறக்கை முளைத்த
பறவையென உன்
ஈர்ப்புவிசை விலகிப்
பறக்க எத்தனிக்கிறேன்....
நீயோ என்னைப்
பித்தனாக்கி சிரிக்கிறாய்...
 
உன்னிலிலேயே
ஒழிந்துபோக மனமற்று
உன்னிலிருந்து விலகியோட
ஒளியும் இடம் தேடிப்
பறக்கிறேன் - நீயோ எங்கும்
ஒளிவீசித் தகர்க்கிறாய்...
 
எங்குசென்று ஒளிந்தாலும்
அங்கும் வந்து என்னை
அலைக்களிக்கிறாய் - நீ
அதில் களிக்கிறாய்...
 
உன்
பெண்மைக்கு பயந்து
உண்மைக்குள் ஒளிந்தேன்..
பொய்ப்பிம்பமாய் என்னை
உலரவைத்தாய்...
 
விண்ணில் ஒளிந்தேன்
நிலவாய் வேவுபார்த்து
நிதர்சனம் களைத்தாய்...
 
மண்ணுக்குள் ஒளிந்தேன்...
மானுடம்பின் உயிராய்..
மண்ணில் வேரூன்றியே
காணுலகின் மரமாய் நீ....
 
இருளுக்குள் ஒளிந்தேன்..
வெளிச்சமாய் உருமாறி
மருளவைத்தாய்...

இரக்கமற்ற இரவுக்குள்
உறக்கமற்று ஒளிந்தேன்..
அதிகாலை அழைப்பிதழாய்..
சுதிசேர்த்து நின்றாய்...
 
ஒலிக்குள் ஒளிந்தேன்
இசையாய் இசைந்தாய்...
விழிக்குள் ஒளிந்தேன்
பாவையாய் ஒளிப்பித்தாய்....
 
தமிழுக்குள் ஒளிந்தேன்
கவிதையாய்த் தீண்டினாய் 
அமிழ்தத்தில் ஒளிந்தேன் - சுவை
தெவிட்டாது தித்தித்தாய்...
 
எங்கெங்கோ ஓடி
ஒளிய இடம்தேடினேன்...
எங்கும் நிறைந்து
ஒளிவீசி நின்றாய்...
 
இனி எனக்கு 
வேறு வழியென்ன இருக்கிறது...?
இனிய கவிதை
வேறு எங்குசென்று
ஒளிய முடியும்...
தமிழைத்தவிர....???